ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஆறுகள் மாசுபடுவதை தவிர்க்க உரிம நிபந்தனைகளை பின்பற்றி நடப்பீர்- ஹீ லோய் சியான் வலியுறுத்து

ஷா ஆலம், செப் 26-  மாநிலத்தில் நதிகள் மாசுபடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக எந்தவொரு மேம்பாட்டு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன் உரிம நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றி நடக்குமாறு சம்பந்தப்பட்டத் தரப்பினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தொழில்துறை நடவடிக்கைகள், நெடுஞ்சாலை கட்டுமானம், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றால் நீரின் தரம், குறிப்பாக முக்கிய நதிப் படுகைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  ஹீ லோய் சியான் கூறினார்.

திட்ட மேம்பாட்டாளர்கள் உரிம நிபந்தனை  அல்லது அனுமதியை மீறி நடப்பது மாநிலத்தில் நதிகளின் தரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும்,  நிர்ணயிக்கப்பட்ட கழிவுகளை கழிவு நீர் தடங்களில் கலப்பது, குப்பைகளை ஆற்றின் கரைகளில் வீசுவது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன என அவர் தெரிவித்தார்.

ஆகவே, தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கவனமாக இருக்கும்படி அனைத்து தொழில் துறையினரையும் கேட்டுக் கொள்கிறேன். பொறுப்பற்ற செயல்கள் நம்மையும் மில்லியன் கணக்கான மக்களையும் பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும் என்று அவர் கூறினார்.

உலக நதிகள் தினத்தை முன்னிட்டு கிள்ளான் மாவட்டத்தின் நதி நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இங்குள்ள பெங்கலான் பத்து பொது பூங்காவில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் பேசிய லோய் சியான், 1999 ஆம் ஆண்டு சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரிய (லுவாஸ்) சட்டத் திருத்தம் 2020இன் கீழ் சுற்றுச் சூழல் மாசுபாடு குற்றங்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 200,000 வெள்ளியிலிருந்து அதிகபட்சம் 10 லட்சம் வெள்ளியாகவும் சிறைத்தண்டனை மூன்று ஆண்டுகள் வரையிலும் அதிகரிப்பது பொது மக்கள் மத்தியில் இத்தகைய குற்றங்களுக்கெதிரான விழிப்புணர்வை அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :