ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

உதவித் திட்டத்திற்கு தகுதி உள்ளவர்களை அடையாளம் காணும் பணியில் கோல குபு பாரு தொகுதி தீவிரம்

உலு சிலாங்கூர், செப் 28. பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தில் பங்கேற்பதற்கு உண்மையில் தகுதி உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் பணியில் கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் ஈடுபட்டு வருகிறார்.

ஆண்டுக்கு 3,600 வெள்ளி உதவித் தொகையை வழங்கக் கூடிய இத்திட்டத்திற்கு தொகுதி அளவில் 337 பேர் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள கிடைக்கப் பெற்றுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த தகவல் சேகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார்.

இத்தகைய விண்ணப்பங்களில் ஏமாற்று வேலைகள் நடைபெறாமலிருப்பதை உறுதி செய்வதற்காக  மலாய், சீன மற்றும் பூர்வக்குடியினர் கிராமங்களில் வட்டாரத் தலைவர்கள் தகவல் சேகரிப்பு பணியை மேற்கொள்வர் என அவர் தெரிவித்தார்.

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி வாக்காளராகவும் மூன்றுக்கு அதிகமான மற்றும் 18 வயதுக்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்துள்ளனரா என்பது இந்த ஆய்வின் போது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கெர்லிங், கம்போங் ஜாவா வட்டார மக்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் (ஓருங்கிணைக்கப்பட்ட) கழகத்தின் சார்பில் நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இத்தொகுதியைச் சேர்ந்த சுமார் 300 பேர் மாதம் 300 வெள்ளி உதவித் தொகையை இ-வாலட் வேவ்பேய் வாயிலாக பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :