கடல் பெருக்கின் எதிரொலி- கிள்ளானில் இரு தற்காலிக நிவராண மையங்கள் திறப்பு

ஷா ஆலம், செப் 28- கடல் பெருக்கினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழு இரு தற்காலிக நிவாரண மையங்களை (பி.பி.எஸ்.) இன்று காலை திறந்துள்ளது.

கம்போங் டெலேக் பாருவைச் சேர்ந்தவர்கள் கம்போங் டேலேக் சமயப் பள்ளியிலும் கம்போங் சுங்கை சீரோ தம்பாஹானைச் சேர்ந்தவர்கள் கம்போங் சுங்கை சீரே சமூக மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கிராம சமூக மேம்பாட்டு மன்ற பிரதிநிதிகளை தொடர் கொள்ளுமாறும் இல்லையேல் நேரில் பி.பி.எஸ். மையங்களுக்குச் செல்லுமாறும் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழு கேட்டுக் கொண்டது.

இன்று காலை 7.15 மணி நிலவரப்படி கிள்ளானில் உள்ள ஐந்து நிலையங்களில் இரண்டில் கடல் நீர் மட்டம் அபாய அளவில் இருந்ததாக அது தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

கிரீஸ் நினைவுச் சின்ன நிலையம் மற்றும் பண்டார் கிள்ளான் நிலையம் ஆகியவை அபாயக்கட்டத்தில் உள்ளன. பொது மக்கள் விழிப்புடன் இருக்கும்  அதே வேளையில் நடப்புச் சூழல்களை அணுக்கமான கண்காணித்து வரும்படியும் அக்குழு கேட்டுக் கொண்டது.

நாளை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கடல் பெருக்கை எதிர் கொள்ளும் வகையில் கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைச் செயல்குழு நடவடிக்கை அறையைத் திறந்துள்ளது.


Pengarang :