ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பண்ணைகளை முறையாகப் பராமரிப்பீர்- பன்றி வளர்ப்போருக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவுறுத்து

ஷா ஆலம், செப் 28- நீர் வளங்கள் மாசுபடுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக சிலாங்கூரில் பன்றி வளர்ப்போர் தங்கள் பண்ணைகளை சுத்தமாக வைத்திருக்கும் அதேவேளையில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பன்றிக் கழிவுகளை பண்ணைக்கு வெளியே அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டுச் சென்று முறையாக அழிக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  ஹீ லோய் சியான் கூறினார்.

தங்கள் பகுதியை விட்டு வெளியேறும் நீரினால் மாசுபாடு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக வடிகால் முறையில் உரிய மாற்றங்களைச் செய்யும்படி நில உரிமையாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நீரின் தரத்தை சோதனையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதோடு மாசுபாடு காணப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

தஞ்சோங் சிப்பாட்டிலுள்ள பன்றி வளர்ப்பு பண்ணைக்கு கடந்த வெள்ளிக் கிழமை மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சிலாங்கூர நீர்  நிர்வாக வாரியம் மற்றும் மாநில கால்நடை சேவைத் துறை அதிகாரிகளும் இப்பயணத்தில் உடனிருந்தனர்.

கோல லங்காட் மாவட்டத்தின் 118 இடங்களிலும் சிப்பாங்கில் சிறிய அளவிலும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் செயல்படுவதாக கூறிய ஹீ லோய் சியான், அவை அனைத்தும் விவசாய நிலங்களில் முறையான அனுமதி பெற்று செயல்படுகின்றன என்றார்.


Pengarang :