ALAM SEKITAR & CUACAECONOMY

பருவமழையின் போது மலைச்சாரல் பாதுகாப்பு மீது மக்களவையில் இன்று விவாதம்

கோலாலம்பூர், அக் 6- வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மண்சரிவு ஏற்படுவதைத் தடுப்பதற்கு ஏதுவாக மலைச்சாரல்களில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முன்னுரிமைப் பெறும்.

இது தவிர, மாநிலந்தோறும் மேற்கொள்ளப்பட்ட ஜெலாஜா அஸ்பிராசி கெலுவார்கா மலேசியா திட்டத்தின் (ஏ.கே.எம்.) மூலம் கிடைக்கப்பட்ட சாதகமான அனுகூலங்கள் குறித்த கேள்வியும் அவையில் முன்வைக்கப்படும்.

இந்த ஏ.கே.எம். திட்டத்தின் மூலம் கிடைத்த நேர்மறையான அனுகூலங்கள் குறித்து ராசா தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் சா கீ சின் பிரதமரிடம் கேள்வியெழுப்புவார் என்று  நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பருவ மழை சமயத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு கேமரன் ஹைலண்ட்ஸ் பகுதியிலுள்ள மலைச்சாரல்கள் மீது கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு பொதுப்பணித்துறை கொண்டுள்ள தயார் நிலை குறித்து கேமரன் ஹைலண்ட்ஸ் தே.மு. உறுப்பினர் டத்தோ ரம்லி முகமது நோர் பொதுப்பணி அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.

சபாவில் குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் இணைய அடைவு நிலை மிகவும் மந்தமாக உள்ளதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் சாட்டிலைட் அகண்ட அலைவரிசையை பொருத்தும் திட்டத்தின் நடப்பு நிலவரம் குறித்து பியூபோர்ட் தொகுதி பெர்சத்து உறுப்பினர் டத்தோஸ்ரீ அஜிசா முகமது டோன் தகவல்  மற்றும் பல்லூடக அமைச்சரிடம் கேள்வி தொடுப்பார்.

மேலும், சூலு தரப்பினர் முன்வைத்துள்ள கோரிக்கை விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையின் மேம்பாடு குறித்தும் டத்தோஸ்ரீ வான் அஜிசா பிரதமரிடம் விளக்கம் கோரவுள்ளார்.


Pengarang :