ECONOMYSELANGOR

ஒருங்கமைப்பு வசதிகளை சிலாங்கூர் தொடர்ந்து ஏற்படுத்தித் தரும்- மந்திரி புசார் உறுதி

கோலாலம்பூர், அக் 6 – இப்பிராந்தியத்தில் இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான வணிக மாநாடுகளில் ஒன்றாக விளங்கும் சிலாங்கூர் அனைத்துலக வணிக உச்சநிலை மாநாடு (சிப்ஸ் 2022) போன்ற ஒருங்கமைப்பு வாய்ப்புகளை சிலாங்கூர் அரசு தொடர்ந்து வழங்கி வரும்.

சிலாங்கூரை ஆசியானுக்கான நுழைவாயிலாக மேம்படுத்துவது தவிர்த்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களை ஒரே நிகழ்வில் ஒன்றிணைப்பதே இந்த வர்த்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்வதன் முக்கிய நோக்கமாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.

பல்வேறு மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் மூலம், பங்குதாரர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் நேரில் கலந்துரையாடலில் ஈடுபடவும் உங்கள் வணிகத்தை ஆசியான் பிராந்தியத்தில் விரிவுபடுத்தவும் இந்த மாநாடு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்று நான் நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

இந்த உச்சநிலை மாநாட்டின் நான்கு நாள்  நிகழ்வுகளில் முழுமையாக பங்கேற்பதன் மூலம் பங்கேற்பாளர்கள் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும் இம்மாநாட்டில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கிறேன் என்று சிப்ஸ் 2022 மாநாட்டின் தொடக்க விழாவில்  உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் ஆறாவது வாணிக உச்சநிலை மாநாட்டை சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷாவின் ராஜா மூடா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.


Pengarang :