ECONOMYMEDIA STATEMENTNATIONAL

“சித்தம்“ ஏற்பாட்டில் இந்திய தொழில் முனைவோர் மாநாடு- ஞாயிறன்று ஷா ஆலமில் நடைபெறும்

ஷா ஆலம், டிச 2- “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டில் சிறப்பு இந்திய தொழில்முனைவோர் மாநாடு வரும் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம், டத்தாரான் மெர்டோக்கா  ஹான் (பெந்தாஸ் பி) சதுக்கத்தில் காலை 8.30 மணி தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.

சித்தம் அமைப்பின் வாயிலாக வர்த்தகத்தில் சாதனை புரிந்தவர்களின் வெற்றிப் பதிவு, கலை நிகழ்ச்சி, கலாசார நடனம், சிலம்பம் மற்றும் மாநில அரசின் உதவித் திட்டங்களுக்கான பதிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இந்த மாநாட்டையொட்டி நடத்தப்படும் என்று அதன் அதிகாரி தீபன் சுப்பிரமணியம் கூறினார்.

இந்த மாநாட்டில் 2020/2021 சித்தம் விண்ணப்பம் மற்றும் மேல்முறையீடு சரிபார்ப்பு முகப்பிடம், 2023ஆம் ஆண்டிற்கான சித்தம் புதிய விண்ணப்பங்களுக்கான முகப்பிடம், இந்திய தொழில் முனைவோருக்கான ஹலால் சான்றிதழ் பயிற்சிக்கான பதிவு (200 பேருக்கு மட்டும்) ஆகியவை இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, உணவு கையாளும் முறை மற்றும் தடுப்பூசி பயிற்சிக்கான பதிவு (200 பேர் மட்டும்), இந்திய தொழில் முனைவோருக்கான பிரத்தியேக ஹிஜ்ரா கடனுதவிக்கான பதிவு ஆகியவையும் இங்கு நடைபெறவுள்ளன.

மேலும் இந்திய தொழில் முனைவோர் தங்கள் வர்த்தகத்தை டிக்டாக் காணொளி மூலம் சந்தைப்படுத்துவது தொடர்பான பயிற்சியும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது என்றார் அவர். 

இந்திய தொழில்முனைவோருக்கு பயிற்சிகள் மற்றும் கடனுதவி வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் சார்ந்த துறைகளில் மேலும் வளர்ச்சி காண்பதை உறுதி செய்யும் நோக்கில் சிலாங்கூர் அரசினால் அமைக்கப்பட்ட அமைப்பாக சித்தம் விளங்குகிறது.

இந்த அமைப்பு ரோட்சியா இஸ்மாயில் தலைமையிலான தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழுவின் கீழ் செயல்படுகிறது.


Pengarang :