ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

முகத்தில் காயங்களுடன் இரு நேப்பாள பிரஜைகளின் உடல்கள் மீட்பு- சிரம்பானில் சம்பவம்

சிரம்பான், டிச 4- முகத்தில் காயங்களுடன் இரு நேப்பாள நாட்டினரின் சடலங்கள் இங்குள்ள ஆக்லண்ட் வர்த்தக மையத்திலுள்ள கடை வீடொன்றில் நேற்றிரவு கண்டு பிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து நேற்று மாலை 6.45 மணியளவில் தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து போலீஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நந்தா மாரோப் கூறினார்.

தொழிலாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் மையமாக செயல்படும் அந்த கடை வீட்டில் இரு ஆடவர்களின் சடலங்கள் காணப்பட்ட வேளையில் மற்றொரு ஆடவர் அங்கு எந்த காயமுமின்றி காணப்பட்டதாக அவர் சொன்னார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த 35 மற்றும் 46 வயதுடைய இரு ஆடவர்களும் பாதுகாவலர்களாக வேலை செய்து வந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

அந்த இரு சடலங்களுக்கும் இடையே அதிக இடைவெளி காணப்பட்டது. அவ்விருவரும் முகத்தில் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. எனினும் தடயவியல் ஆய்வுக்குப் பின்னரே இக்கொலை தொடர்பான முழு விபரங்கள் தெரியவரும் என அவர் சொன்னார்.

சம்பவ இடத்தில் காணப்பட்ட ஆடவர் மது போதையில் இருந்ததோடு கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சுத்தியல் ஒன்றும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டது என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :