ECONOMYNATIONALSELANGOR

ஐ-சீட் திட்டத்தின் வழி வெ.13 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் வணிகர்களுக்கு விநியோகம்- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், டிச 6- சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) மூலம் இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை 13 லட்சம் வெள்ளி மதிப்பிலான வர்த்தக உபகரணங்கள் இந்திய வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை அனைத்தும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு விட்டதாக சமூக மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

இந்த ஐ-சீட் திட்டத்திற்கு கடந்த 2021ஆம் ஆண்டு 15 லட்சம் வெள்ளியும் 2022ஆம் ஆண்டு 13 லட்சம் வெள்ளியும் ஒதுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்திய தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்கள் வழங்குவது மற்றும் ஐ-சீட் பயனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று பண்டமாரான் உறுப்பினர் லியோங் தக் சீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐ-சீட் முன்னெடுப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் இந்திய சமூகத்தை மட்டும் மையமாக கொண்டுள்ளதாக கணபதிராவ் குறிப்பிட்டார்.

இந்திய சமூகத்தில் உயர் திறன் கொண்டவர்களையும் புதிய தொழில் முனைவோரையும் உருவாக்குவதில் அதிகளவிலான பங்களிப்பு தேவைப்படுவதை கருத்தில் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது என்றார் அவர்.

இந்திய சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில் இந்த ஐ-சீட் திட்டத்தை மாநில அரசு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடக்கியது. வர்த்தகத்தில் ஈடுபடுவோரின்  தேவையைப் பொறுத்து அவர்களுக்கு உபகரணங்களை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

 


Pengarang :