ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்த ஆர்.எஸ்.-1 திட்டத்தை மாநில அரசு பயன்படுத்தும்

ஷா ஆலம், டிச 7- துரித வளர்ச்சி கண்டு வரும் மாநிலம் என்ற முறையில் சிலாங்கூர் தனது முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்.எஸ்.-1) வாயிலாக பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்திக் கொள்ள வரும் 2023ஆம் ஆண்டில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் மந்தமான பொருளாதார வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ளும்.

சிலாங்கூரை விவேக, சுபிட்சம் நிறைந்த மற்றும் வசிப்பதற்கு உகந்த மாநிலமாக வரும் 2025ஆம் ஆண்டிற்குள் மாற்றுவதற்கான வியூகங்கள் மற்றும் திட்டங்களை குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் கொண்டுள்ள மேம்பாட்டுத் திட்டமாக விளங்கும் இந்த முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிமுகம் செய்ததாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டுத் திட்டமான இது வரும் 2023ஆம் ஆண்டில் சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்யாவிட்டாலும் எதிர்காலத்திற்கான திட்டமிடலுக்கு முக்கியத்துவம் அளிக்க மாநில அரசு நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இதன் காரணமாகவே நாம் முதலாவது சிலாங்கூர் திட்டத்தை அறிமுகப் படுத்தினோம். இத்திட்டத்தின் கீழ் தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் (இட்ரிஸ்) மற்றும் சபாக் பெர்ணம் வட்டார மேம்பாடுப் பகுதி (சாப்டா) என பிராந்திய ரீதியான மேம்பாட்டுத் திட்டங்களை தொடக்கியுள்ளோம் என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

பிராந்திய ரீதியான மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அந்தந்த பகுதியிலுள்ள வளங்களைக் கொண்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.


Pengarang :