ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

இண்டாரியா குடியிருப்பில் மண் சரிவை சரி செய்ய வெ.2.5 கோடி ஒதுக்கீடு- ரோட்சியா தகவல்

ஷா ஆலம், டிச 24- இங்குள்ள பத்து தீகா, செக்சன் 22, பங்சாபுரி இண்டாரியா ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்தத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவைச் சரி செய்ய மாநில அரசு சுமார் 2 கோடியே 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அங்குள்ள குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கி வரும் இப்பிரச்னைக்கு அ குடியிருப்பின் அருகிலுள்ள ஆற்றின் கரைகளில் தடுப்புச் சுவர்களை அமைப்பதன் மூலம் தீர்வு காணப்படும் என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்தும் இடத்தையும் உள்ளடக்கிய இந்த சீரமைப்பு பணி அடுத்தாண்டு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி 2024ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி முற்றுப் பெறும் என அவர் தெரிவித்தார்.

அந்த கட்டிடம் பாதுகாப்பானதாக உள்ளதால் இந்த சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளும்போது குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டை காலி செய்ய வேண்டியதில்லை என்றும் அவர் சொன்னார்.

எனினும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் காலக்கட்டத்தில் இரைச்சல் மற்றும் தூசு பரவல் போன்ற அசௌகர்கயங்களை குடியிருப்பாளர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அந்த குடியிருப்பில் வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 12 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண மாநில அரசு முடிவெடுத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அந்த கட்டிடத்தின் கட்டமைப்பு மற்றும் அப்பகுதியிலுள்ள நிலத்தின் தன்மை ஆகியவற்றின் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டப் பின்னர் இந்த சீரமைப்பு பணிகளை இக்ராம் எனப்படும் மலேசிய பொதுப்பணிக் கழகம் மேற்கொள்ளும் என்றும் ரோட்சியா சொன்னார்.


Pengarang :