MEDIA STATEMENTSELANGOR

பத்தாங் காலி நிலச்சரிவு- மீட்புப் பணியில் பெரும் பங்காற்றிய தீயணைப்புத் துறைக்கு சுல்தான் பாராட்டு

ஷா ஆலம், டிச 30- பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்ட மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்  நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மீட்புப் பணி முற்றுப் பெறும் வரை தீயணைப்புத் துறையின் அனைத்து உறுப்பினர்களும் முழு ஈடுபாடு காட்டியதைக் கண்டு தாம் பெருமிதம் கொள்வதோடு  அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

தங்களுக்கு இடப்பட்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றுவதில் அவர்கள் தொடர்ந்து முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயல்படுவர் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மீட்பு பணி தொடர்பான செய்திகளை நான் தினமும் அணுக்கமாக கண்காணித்து வந்தேன். பல்வேறு சவால்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும் மீட்பு பணியை மேற்கொள்வதில் அவர்கள் முழு ஈடுபாட்டையும் உத்வேகத்தையும் காட்டியது கண்டு நான் பெருமிதம் அடைந்தேன் என்றார் அவர்.

இந்த மீட்புப் பணியில் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கும் இதர துறைகளுக்கும் இடையே அணுக்கமான ஒருங்கிணைப்பு காணப்பட்டது குறித்து சுல்தான் தனது மகிழ்ச்சியைப் புலப்படுத்தியதாக சிலாங்கூர் அரச அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட் மற்றும் சிலாங்கூர்  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராஸாம் காமீஸ் ஆகியோரை இங்குள்ள இஸ்தானா புக்கிட் காயாங்கானில் சுல்தான் சந்தித்தார்.


Pengarang :