RENCANASELANGOR

மிட்லண்ட்ஸ்  தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதி  2023 இல் துவங்கப்படும்

 ஷா ஆலம்  டிச 30 ;- கடந்த 29/12/2022 ஆம் நாள் , சிலாங்கூர் மாநில மந்திரி புசார் மாண்புமிகு டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி அவர்கள் , சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றம்(SICC), இல்ஹாம் கல்விக் கழகம் கோலாலம்பூர் & சிலாங்கூர் (ILHAM) மற்றும் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் வாரியக்குழு (LPS) ஆகியவற்றின் ஏற்பாட்டில் எஸ். பி. எம். இந்திய மாணவர்களுக்காக நடத்தப்பட்ட 3 நாள் கல்வி முகாமில் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் மந்திரி புசாரின் மக்கள் தொடர்பு சிறப்பு அதிகாரியுமான மாண்புமிகு Dr. குணராஜ்  ஜோர்ஜ் அவர்களும்,  கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சார்ல்ஸ் சந்தியாகு அவர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பேசும் போது , இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 3 முக்கியத் தகவல்களை முன் வைத்தார் என ஏற்பாட்டுக்  குழுவின் ஆலோசகரும் சிலாங்கூர் இந்திய ஆலோசக மன்றத்தின் உறுப்பினருமான    திரு. குணசேகரன்  கந்தசுவாமி   தெரிவித்தார்.
சிலாங்கூர் இந்திய ஆலோசக மன்றம் கடந்த 14/8/2022 இல் மந்திரி புசாரால் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப் பட்டது. இந்த மன்றத்தின் தலைவர் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  சிலாங்கூர் இந்தியர்  ஆலோசக   மன்றத்தின் 10 அம்ச கோரிக்கைகளில்  36  திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அதில் மனித வளத்திட்டத்தின் 4 துணைத் திட்டங்களை உடனடியாக நடத்த ஒப்புதலும் மானியமும் வழங்க  மந்திரி புசார் வாக்குறுதி அளித்தார்.அந்தத் திட்டங்களுள் ஒன்றான சிறப்புக் கல்வி முகாம்  சிலாங்கூர் மாநிலத்தில் பயிலும் 70  எஸ்.பி.எம் மாணவர்களுக்கு , சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் நடத்தப்பட்டது எனவும் திரு. குணசேகரன் கந்தசுவாமி  தமதுரையில் குறிப்பிட்டார்.
2019 இல் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கட்டி கொடுத்த   விடுதி 200 மாணவர்கள் தங்கி படிக்கக் கூடிய வசதிகளைப் பெற்றுள்ளது. சில தவிர்க்கவியலாத காரணங்களால் பயன்படுத்தப் படாமல்  இருந்த  இவ்விடுதி, இன்று  சரித்திரம் பதிக்கும் வகையில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதைச் செயல்படுத்த மிகவும் சிரத்தை எடுத்து நடைமுறைக்குக் கொண்டு  வந்த SICC உறுப்பினர்களுக்கு இத்தருணத்தில் நன்றி கூறினார்.
மாநில மந்திரி புசார் தமதுரையில்  2023 ஆம் ஆண்டு , மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் விடுதி 100 இந்திய  மாணவர்கள் தங்கி பயில்வதற்குத் தயாராக உள்ளது எனவும் அதற்கான முழுச் செலவையும்   மாநில அரசாங்கமும் கல்வியமைச்சும் ஏற்றுக் கொள்ளும்  என்று அறிவித்தார்.
 2024 ஆம் ஆண்டில் இவ்விடுதி முழுமையாக இயங்கும் எனவும் தெரிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தைப் பின்பற்றி இதர மாநிலங்களும்  இந்திய மாணவர்களுக்காக தங்கும் விடுதிகளை நிறுவ வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.  இவ்வேளையில் சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றத்தினருக்குத்  தமது பாராட்டினைத் தெரிவித்து நன்றி கூறினார்.
27/12/2022 முதல் 29/12/2022 வரை நடந்த முகாமில் கலந்து கொண்ட 70 மாணவர்களும் தேர்வில் சிறந்த மதிப ்பெண்களைப் பெற இந்த முகாம் பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அதற்காக உதவிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறினார்.
தொடர்ந்து , விரைவில் இந்திய மாணவர்களுக்காக இலவச பிரத்தியேக வகுப்புகள் (Tuisyen Rakyat) நடத்துவதற்கும் ஆவணம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றத்தின்  (SICC)  செயல்திறன் பாராட்டத்தக்கது. 10 அம்சங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவர இணைந்து செயல்படுவோம் என திரு. குணசேகரன் கந்தசுவாமி கேட்டுக்கொண்டார்.

Pengarang :