ANTARABANGSA

இந்தோ. அதிபர் ஜோக்கோவியைப் போகோர் அதிபர் மாளிகையில் அன்வார் இன்று காலை சந்தித்தார்

போகோர், ஜன 9- இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு
இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம், அந்நாட்டு அதிபரான ஜோக்கோவி என அழைக்கப்படும்
ஜோக்கோ விடோடோவை போகோர் அதிபர் மாளிகையில் இன்று காலை
சந்தித்தார்.

தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அதிபரின் அதிகாரப்பூர்வ
இல்லத்தை உள்ளடக்கிய அந்த நிர்வாக அலுவலகத் தொகுதிக்கு வருகை
புரிந்த அன்வாருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு நல்கப்பட்டது.

இந்த வருகையின் போது அன்வார் கலாசாரத்தின் மேன்மையைப்
பறைசாற்றும் வகையில் சொங்கோக் அணிந்திருந்தார். இரு நாடுகளின்
தேசியக் கீதங்களும் ஒலிக்கப்பட்டப் பின்னர் மரியாதை நிமித்தம் குண்டுகள்
முழங்கின.

பின்னர் பிரதமருக்கு இந்தோனேசிய அமைச்சர்கள் அறிமுகம் செய்து
வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாளிகையின் பின்புற வளாகத்தில்
மரம் ஒன்றை நட்ட அவர், அரண்மனையைச் சுற்றிப் பார்த்தப் பின்னர்
இந்தோனேசிய அதிபருடன் பேச்சுவார்த்தையைத் தொடக்கினார்.

பிரதமரின் பயணக் குழுவில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்
ஜாம்ரி அப்துல் காடீர், அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல்
அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜப்ருள் அப்துல் அஜிஸ், சிலாங்கூர் மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இரு நாட்டுத் தலைவர்களும் இருவழி ஒத்துழைப்பை மேம்படுத்துவது
மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வது குறித்து
விவாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :