ECONOMYNATIONALPENDIDIKAN

கோவிட்-19 அதிகரித்தால் கட்டாய முகக்கவரி, கூடல் இடைவெளி அமலாக்கம்- சிலாங்கூர் அரசு பரிசீலனை

ஷா ஆலம், ஜன 12- சிலாங்கூரில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்தால் பொது மக்கள் முகக்கவரி அணிவது மற்றும் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பதை கட்டாயமாக்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

இது தவிர, கோவிட்-19 நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக செலங்கா செயலியைப் பயன்டுத்துவதை கட்டாயமாக்குவதற்கான சாத்தியத்தையும் மாநில அரசு ஆராய்ந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாங்கள் இப்போது வார அடிப்படையில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையை கண்காணித்து வருகிறோம். தொற்று அதிகரிப்பது கண்டுபிடிக்கப் பட்டால் கட்டாய முகக்கவரி, கூடல் இடைவெளி மற்றும் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார் அவர்.

நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணிக்கு மைசெஜாத்ரா தயாராகாவிடில் செலங்கா செயலி தயார் படுத்தப்படும். கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள செக்சன் 7 இல் அனிஸ் எனப்படும் பிரத்தியேக சிறார்களுக்கான பாலர் பள்ளியைத் திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் ஏதுவாக மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :