SELANGOR

சதுப்பு நிலக்காடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் பந்தாய் சுங்கை காஜாங் சீல் வைக்கப்பட்டது- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜன 18- சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கில்
தஞ்சோங் காராங், பந்தாய் சுங்கை காஜாங் கடற்கரை பகுதி சீல்
வைக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி விளக்கினார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் சம்பந்தப்பட்ட அந்த இடம் சதுப்பு நில ரிசர்வ்
பகுதியை உள்ளடக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

அப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று வட்டார மக்கள் முன்பு
கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி ஊடுருவலைத் தடுத்து
அப்பகுதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார் அவர்.

இப்பகுதியில் அத்துமீறல் (மரங்களை வெட்டுவது) நடந்துள்ளதாக
எங்களுக்குப் புகார் கிடைத்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலப்
பகுதியாக உள்ளதால் அத்துமீறலைத் தடுக்க மாநில வனத்துறை
நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு நடைபெற்ற அனைத்துலக ஹலால் (செல்ஹாக்)
மாநாட்டைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் விரிவான விளக்கத்தை அளிக்கும்படி மாநில
வனத்துறையைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

அந்த கடற்கரை பகுதி கடந்த 10ஆம் தேதி மூடப்பட்டது தொடர்பில் மாநில
வனத்துறை விளக்கமளிக்க வேண்டும் என்று தஞ்சோங் காராங்
நாடாளுன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ஜூல்கஃப்ரி ஹனாப்பி
வலியுறுத்தியிருந்தார்.

சுற்றுலா மற்றும் பொழுது போக்கு மையமாகத் திகழும் அப்பகுதியை
மூடும் நடவடிக்கை பொது மக்கள், வருகையாளர்கள் மற்றும் வணிகர்கள்
மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் கூறினார்.


Pengarang :