NATIONAL

அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி முடக்கம்- பத்தாண்டு காலப் பிரச்னைக்குத் தீர்வு வேண்டும்- மைக்கி வேண்டுகோள்

கோலாலம்பூர், ஜன 18- பத்தாண்டுகளாக நீடித்து வரும் அந்நியத்
தொழிலாளர்களுக்கான அனுமதி முடக்கப் பிரச்னைக்கு அரசாங்கம்
விரைந்து தீர்வு காண வேண்டும் என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய
வர்த்தக மற்றும் தொழிலியல் சங்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வரும் இந்த அனுமதி
முடக்கம் காரணமாக இந்திய தொழில்முனைவோர் சம்பந்தப்பட்ட
வர்த்தகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சம்மேளனத்தின்
தலைவர் என். கோபாலகிருஷ்ணன் கூறினார்.

சேவைத் துறை சார்ந்த பல்வேறு வணிகங்களுக்கு 50,000 தொழிலாளர்கள்
வரை தேவைப்படுவதாக அவர் தெரிவித்ததாக மலேசியக்கினி இணைய
ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகவே. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இப்பிரச்னையில்
தலையிட்டு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தாங்கள் கேட்டுக்
கொள்வதாக அவர் சொன்னார்.

இந்த அந்நியத் தொழிலாளர் முடக்கப் பிரச்சனைப் பத்தாண்டுகளாக நீடித்து
வருகிறது. பாரிசான் ஆட்சிக்காலம் முதல் இதுவரை தீர்வு
காணப்படவில்லை. நாங்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சனைக்குப் புதிய
அரசாங்கத்தினால் தீர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம் என்றார்
அவர்.

நேற்று இங்குள்ள மைக்கி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 17,000 இந்திய வணிகர்களை அங்கத்தினர்களாகக்
கொண்ட 20 வர்த்தக சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பாக மைக்கி
விளங்குகிறது.

நாட்டில் தற்போது 17 லட்சம் சட்டப்பூர்வத் தொழிலாளர்கள் பணி புரிந்து
வருவதாகக் கூறிய கோபாலகிருஷ்ணன், தங்களுக்கு உணவகம், நகைத் தொழில், ஜவுளி, சிகையலங்காரம், மளிகைக் கடை, பழைய இரும்பு வியாபாரம் போன்ற தொழில்களுக்கு 50,000 தொழிலாளர்கள் மட்டுமே தேவைப்படுகின்றனர் என்றார்.

உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதில் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு உள்ள கடப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இத்துறைகளில் வேலை செய்ய அவர்கள் தயாராக இல்லை என்றார் அவர்.

இந்தியர்களின் பாரம்பரியத் தொழில்களான உணவகம், ஜவுளி, பத்திரிகை
விநியோகம், சிகையலங்காரம், பழைய இரும்பு வியாபாரம் போன்ற
துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் கடந்த 2013ஆம் ஆண்டு முடிவெடுத்தது.


Pengarang :