ANTARABANGSAECONOMY

சமூக நல இல்லங்களில் உள்ளவர்களுக்கு எஸ்.டி.டி.சி. மூலம் தொழில் பயிற்சி- மாநில அரசு திட்டம்

ஷா ஆலம், ஜன 20-  சிலாங்கூர் மாநில தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் (எஸ்.டி.டி.சி.) மூலமாக சமூக நல இல்லங்களில் தங்கியிருக்கும் ஆதரவற்ற சிறார்களுக்கு திறன்களை மேம்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

 ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள சிறார்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மனித மூலதன மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

பெரும்பாலும் சமூக நல இல்லங்களில் வசிப்பவர்கள்  18 வயதை எட்டும் போது அங்கு தங்க மாட்டார்கள். எனவே தொழில் வளர்ச்சிக்கான படியாக, எஸ்.டி.டி.சி. வழங்கும் பயிற்சிகள் அவர்களின் ஆக்கத் திறனை மேம்படுத்த விரும்புகிறோம். 

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். சிலாங்கூரில் நூற்றுக்கணக்கான சமூக நல இல்லங்கள் உள்ளன. அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் இந்த திட்டம் வெற்றிகரமானதாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று முகமது கைருடின் ஓத்மான் தெரிவித்தார்.

முன்னதாக அவர் இங்குள்ள சுங்கை பூலோவில் உள்ள கம்போங் பஹாகியா புக்கிட் லகோங்கில்   45 முன்னாள் சிலாங்கூர் விளையாட்டு வீரர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கவந்து கொண்டார்.

Pengarang :