சீனப் புத்தாண்டு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது சாலைத் தடுப்புகள் போடப்படாது- ஜே.பி.ஜே. அறிவிப்பு

கோலாலம்பூர், ஜன 21- சீனப் புத்தாண்டின் போது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் “ஓப் பெர்செப்பாடு“ ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது சாலைத் தடுப்புச் சோதனைகள் நடத்தப்படாது என்று சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) அறிவித்துள்ளது.

பொது விடுமுறை காரணமாக சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டதாக சாலை போக்குவரத்து இலாகாவின் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.

நேற்று இங்குள்ள செலத்தான் ஒருங்கிணைந்த பஸ் முனையத்தில் சாலை பாதுகாப்பு இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இருந்த போதிலும் அடிக்கடி விபத்துகள் நிகழும் இடங்களைக் கண்காணிப்பது மற்றும் ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பது ஆகிய நோக்கங்களுக்காக 2,000 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை ஜே.பி.ஜே. பணியில் ஈடுபடுத்தும் என்றும் அவர் சொன்னார்.

இது தவிர, பஸ் ஓட்டுநர்கள் தங்கள் பயணத்தின் போது சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கின்றனரா என்பதை உறுதி செய்வதற்காக ஜே.பி.ஜே. அதிகாரிகள் பயணிகள் போல் அந்த பஸ்களில் பயணம் செய்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :