ECONOMYSELANGOR

ரவாங்கில் வாரம் ஒரு முறை மலிவு விற்பனை நடத்தப்பட வேண்டும்- சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

ஷா ஆலம், ஜன 21- மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் (ஜே.இ.ஆர்.) மலிவு விற்பனைக்கு கிடைத்து வரும் அமோக ஆதரவை கருத்தில் கொண்டு ரவாங் தொகுதியில் இந்த விற்பனையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

சிலாங்கூ மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் குறைந்தது வாரம் ஒரு முறையாவது இந்த விற்பனையை ரவாங்  தொகுதியில் நடத்தும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தொகுதி உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

சீனப்புத்தாண்டை முன்னிட்டு கடந்த வாரமும் இவ்வாரமும் இரு விற்பனைத் திட்டங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டம் தங்களுக்கு மிகுந்த பலனைத் தருவதாக பொது மக்கள் குறிப்பாக வசதி குறைந்தவர்கள் கூறுகின்றனர் என்று சுவா தெரிவித்தார்.

இதனைக் கருத்தில் கொண்டு ரவாங் தொகுதிக்கு கூடுதலாக அதாவது குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது இந்த மலிவு விற்பனை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பி.கே.பி.எஸ். நிர்வாகத்திடம் தாம் பரிந்துரைக்கவுள்ளதாக அவர் சொன்னார்.

மாநில அரசின் இந்த மலிவு விற்பனை கடந்தாண்டு செப்டம்பர்  6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளில் நடத்தப்பட்டது. 

எனினும், பொது மக்களின் ஆமோக ஆதரவைத் தொடர்ந்து இந்த திட்டம் வரும் மார்ச் மாதம் வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.


Pengarang :