ECONOMYMEDIA STATEMENT

ஹராப்பான்-பாரிசான் தொகுதி பங்கீடு பிப்வரியில் முடிவுக்கு வரும்- மந்திரி புசார்

செலாயாங், ஜன 29- சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு அடுத்த மாதம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடிமட்ட நிலையில் தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்கு ஏதுவாக இந்த தொகுதி பங்கீடு விரைவாக மேற்கொள்ளப்படுவதாக மந்திரி  புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தற்போது தொகுதி பங்கீடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதவாக்கில் இப்பணி முற்றுப்பெறும் என எதிர்பார்க்கிறோம். ஒற்றுமை அரசாங்கத்திற்கு இடையே மோதல் ஏற்படக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.

அவரவருக்கு தனி கருத்து இருக்கலாம். எனினும், அனைவரும் கூடிப் பேசி ஒரு முடிவெடுப்போம். நல்லிணக்க அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள பத்து கேவ்ஸ் சமூக மண்டபத்தில்  தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் (தாவாஸ்) திட்ட உதவிகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம சமூக மேம்பாட்டு மன்ற உறுப்பினர்கள் நியமனம் குறித்து வினவப்பட்ட போது, மாநில சட்டமன்றத் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தவுடன் இது குறித்து விவாதிக்கப்படும் என்று அமிருடின் பதிலளித்தார்.

இதர விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு முன்னர் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தொகுதி பங்கீடு தொடர்பான விவகாரத்திற்கு தீர்வு காண விரும்புகிறோம். ஏனென்றால் இந்த நியமனங்கள் ஆளும் அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டவையாகும் என்றார் அவர்.

நாம் இப்போதுதான் ஓற்றுமை அரசாங்கத்தை அமைத்துள்ளோம். மாநிலத் தேர்தல் முக்கியமானது என்பதால் அதில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :