கோலாலம்பூர், பிப் 2 - தலைநகரில் உள்ள சுவிடன் மற்றும் டச்சு தூதரகங்களுக்குத் முன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டு கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 10 பேரிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரின் வாக்குமூலங்களும் சமீபத்தில் எடுக்கப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார். அடுத்து வரும் நாட்களில் மேலும் பலர் விசாரணைக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மாநகர காவல்துறையின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்தார். அண்மையில் ஸ்டாக்ஹோமில் புனித குர்ஆன் நகல் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஒற்றுமை பேரணி என்ற பெயரிலும் இரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் டெல்ஹான் யஹாயா கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார். இரண்டு கூட்டங்கள் தொடர்பாக 2021 அமைதிப் பேரணி சட்டப் பிரிவு 9(5)ன் கீழ் இரண்டு விசாரணை அறிக்கைகளைத் போலீசார் திறந்துள்ளனர் என்று அவர் கூறியிருந்தார். - பெர்னாமா
