SELANGOR

கட்டாய முகக்கவரி உத்தரவு- வணிகர்களுக்கு எம்.பி.எஸ்.ஏ. தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்

ஷா ஆலம், பிப் 2- கட்டாய முகக்கவரி உத்தரவை அமல்படுத்தும் விஷயத்தில் ஷா ஆலம் மாநகர் மன்றம் உணவகத் துறையினருக்குத் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் நாள் தொடங்கி அமல்படுத்தப்பட்ட இந்த நடைமுறைக்கு உணவகத் தரப்பினரிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

உணவு மற்றும் பான விற்பனையாளர்கள் மத்தியில் முகக்கவரி அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதிலும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். இந்த விவகாரத்தை மாநகர் மன்றத்தின் லைசென்ஸ் துறை மற்றும் சுற்றுச் சூழல் சுகாதாரத் துறை கண்காணித்து வரும் என்று சிலாங்கூர்கினியிடம் அவர் சொன்னார்.

வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் உணவு சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் ஷா ஆலம் நகரில் உள்ள அனைத்து உணவக உரிமையாளர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து உணவகப் பணியாளர்களும் முகக்கவரி அணிவதைக் கட்டாயமாக்கும் நடைமுறையை ஷா ஆலம் மாநகர் மன்றம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி அமல்படுத்தியதோடு புதிய லைசென்ஸ் விண்ணப்பத்திற்கான நிபந்தனையாகவும் அறிவித்தது.

சிலாங்கூரிலுள்ள அனைத்து உணவக மற்றும் உணவு அங்காடிப் பணியாளர்கள் முகக்கவரி அணிவதை கட்டாயமாக்கும் நடைமுறை ஜனவரி முதல் நாள் தொடங்கி அமலுக்கு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு இறுதியில் கூறியிருந்தார்.


Pengarang :