NATIONAL

பெர்சத்து கட்சிக்கு எதிரான எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை- பிரதமர்

புத்ராஜெயா, பிப் 2- பெர்சத்து கட்சிக்கு எதிரான ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்.) விசாரணை உள்பட அமலாக்கத் தரப்பினரின் எந்த சட்ட அமலாக்க நடவடிக்கையிலும் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தலையிடவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

விசாரணையை மேற்கொள்வதில் அனைத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவுகளும் நீதித் துறையும் தொடர்ந்து சுதந்திரமாகச் செயல்படும் என்று வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் ஒற்றுமை அரசாங்கத்தின் மீது சம்பந்தப்பட்ட அந்த கட்சி குற்றஞ்சாட்டுவது பொறுப்பற்றச் செயலாகும் எனவும் அவர் சொன்னார்.

அவர்கள் செய்ததைப் போல் நெருக்குதல் தரும் செயலை நாங்களும்
செய்ய மாட்டோம். விசாரணை மற்றும் அமலாக்கத் தரப்பினரை நாங்கள்
பயன்டுத்தவும் மாட்டோம் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தங்களின் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக அரசாங்கத்தின் கீழுள்ள துறைகளைப் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் அரசாங்கம் பயன்படுத்துவது குறித்து தாம் வருத்தமடைவதாகப் பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனடின் நேற்று கூறியிருந்தார்.

சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாக நம்பப்படும் நிதி தொடர்பான
விசாரணைக்கு உதவுவதற்காகப் பெர்சத்து கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையர் டான்ஸ்ரீ
அஸாம் பாக்கி நேற்று தெரிவித்திருந்தார்.

அந்த கட்சி பயன்படுத்தும் நிதி தொடர்பில் அரச மலேசியப் போலீஸ் படை மற்றும் எஸ்.பி.ஆர்.எம்.மிடம் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் பெர்சத்து கட்சிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுவதாகப் பிரதமர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :