NATIONAL

தைப்பூச விழாவில் 20 லட்சம் பேர் திரள்வர்- பத்து கேவ்ஸ் வட்டாரத்தில் பல சாலைகள் மூடப்படும்

கோலாலம்பூர், பிப் 3- வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலைத் திருத்தலத்தில் சுமார் இருபது லட்சம் பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகப் பத்துகேவ்ஸ் வட்டாரத்திலுள்ள பல சாலைகளில் இன்று தொடங்கி வரும் 5ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைனால் முகமது முகமது கூறினார்.

தைப்பூச விழாவை முன்னிட்டு இன்றிரவு 10.00 மணியளவில் வெள்ளி இரதம் தலைநகர் ஜாலான் துன் எச்.எஸ்.லீ சாலையிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு நாளை சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் பத்துமலைத் திருத்தலம் வந்தடையும் என
எதிர்பார்க்கப்படுகிறது என அவர் சொன்னார்.

பத்து கேவ்ஸ் பகுதியிலுள்ள சாலைகள் நேற்றிரவு தொடங்கி பிப்ரவரி 8ஆம் தேதி வரை போக்குவரத்துக்கு மூடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தைப்பூசத்தின் போது அப்பகுதியில் போக்குவரத்து சீராக உள்ளதை உறுதி செய்யும் நோக்கில் இச்சாலைகள் மூடப்படுவதாக நேற்று இங்குள்ள டேவான் மெர்த்தாக்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இப்பகுதியில் உள்ள வாகனமோட்டிகளுக்குப் போலீசார் பரிந்துரைக்கும் மாற்று வழிகள் அவ்வப்போது கோம்பாக் மாவட்டப் போலீஸ் துறையின் பேஸ்புக் வாயிலாகத் தெரிவிக்கப்படும் எனக் கூறிய அவர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக மாற்று வழிகளை அல்லது பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும்படி பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :