SELANGOR

பண்டார் சௌஜானா புத்ரா மேம்பாலம் டிசம்பர் மாதம் பூர்த்தியாகும்

கோல லங்காட், பிப் 3- பண்டார் சௌஜானா புத்ரா பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேம்பாலம் இந்த வருடம் டிசம்பர் மாதம் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 815 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம் 6 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இலிட் எனப்படும் மத்திய சுற்றுவட்டச் சாலை மற்றும் தென் கிள்ளான் விரைவுச் சாலை ஆகியவற்றை இணைக்கும் இந்த மேம்பாலப் பணிகளில் இடையில் ஏற்பட்ட சுணக்கத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகக் கடந்த ஈராண்டு காலமாக அந்த மேம்பாலக் கட்டுமானப் பணிகள் தடைபட்டிருந்தன. பின்னர், நீர், மின் இணைப்புகளை இடமாற்றம் மற்றும் நெடுஞ்சாலைத் தரப்பினருடனான ஒத்துழைப்பு ஆகிய விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டு தற்போது நிர்மாணிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன என்று அவர்
குறிப்பிட்டார்.

இரு நெடுஞ்சாலைகளுடன் இணைப்பைக் ஏற்படுத்தக்கூடிய விநோதமான சூழ்நிலை இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை. இது பெரும் சிக்கல் நிறைந்த ஒன்றாக விளங்கியது. மேலும் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த நீர் குழாய்கள் மற்றும் மின் கம்பிகளையும் அகற்ற வேண்டியிருந்தது என்றார் அவர்.

நேற்று இங்குள்ள பண்டார் சௌஜானா புத்ரா மேம்பால நிர்மாணிப்பு பகுதிக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :