ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கனத்த மழை காரணமாக பினாங்கில் வெள்ளம்- 38 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

கோலாலம்பூர், பிப் 4- நேற்று மாலை 3.30 மணி தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு நீடித்த இடைவிடாத மழையைத் தொடர்ந்து வெள்ள பாதிப்பை எதிர் கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் பினாங்கு புதிதாக இணைந்துள்ளது.

இந்த வெள்ளப் பிரச்னையைத் தொடர்ந்து செபராங் பிறை உத்தாரா மற்றும் செபராங் பிறை செலாத்தானில் இரு தற்காலிக துயர் துடைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று விடியற்காலை 2.00 மணி நிலவரப்படி செபராங் பிறை உத்தாரா, குபாங் மேனேரோங் சமூக மண்டபத்தில் ஒன்பது குடும்பங்களை சேர்ந்த 38 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ கூறினார்.

செபராங் பிறை செலத்தான் மாவட்டத்திலுள்ள பாக்காப் இண்டா தேசிய பள்ளியில் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் அடைக்கலம் புகுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை 6.30 மணி வரை நீடித்த கடும் மழை மற்றும் கடல் பெருக்கு காரணமாக செபராங் பிறை உத்தாரா மற்றும் செபராங் பிறை செலாத்தானில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

பல இடங்களில் 0.6 மீட்டர் வரை வெள்ளம் ஏற்பட்டது. எனினும், நேற்று நள்ளிரவுக்குள் பல இடங்களில் நீர் வடிந்து விட்டது என்று அவர் கூறினார்.

கெடா மாநிலத்தின் ரெலாவ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து 11 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் ரெலாவ் தேசிய பள்ளியில் தங்க வைக்கப்படுள்ளதாக பண்டார் பாரு மாவட்ட தற்காப்பு துறை அதிகாரி கூறினார்.

நேற்று இரவு 7.00 அளவில் இந்த துயர் துடைப்பு மையத்தில் ஏழு குடும்பங்களை  சேர்ந்த 14 பேர் மட்டுமே தங்கியிருந்த தாக அவர் தெரிவித்தார்.


Pengarang :