ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் மலிவு விற்பனை- இரண்டே வாரங்களில் வெ.14 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் பதிவு

அம்பாங், பிப் 4- சிலாங்கூர் மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் (ஜே.இ.ஆர்.) 2.0 திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி மாநிலத்தின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த விற்பனையின் வழி பொது மக்கள் 400,000 வெள்ளிக்கும் மேல் மிச்சப்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியதாக அடிப்படை விவசாய தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

உதவித் தொகை உள்பட சுமார் 1 கோடியே 20 லட்சம் வெள்ளியை நாம் செலவிட்டதன் மூலம் சந்தையை விட 30 விழுக்காடு குறைவான விலையில் பொது மக்களுக்கு உணவுப் பொருட்களை விற்பதற்குரிய வாய்ப்பு கிட்டியது என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த விற்பனை கடந்தாண்டில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. அதன் அடிப்படையில் தினசரி ஒன்பது இடங்களில் வாரத்தின் ஆறு நாட்கள் இந்த விற்பனையை நடத்துகிறோம். கடந்த இரு வாரங்களில் மட்டும் 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் இத்திட்டத்தின் வழி விற்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள தாமான் நிர்வாணாவில் இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையை தொடக்க வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :