ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலிவு விற்பனை- கோலக் கிள்ளான் தொகுதியில் 6,000 பேர் கடந்தாண்டு பயனடைந்தனர்

கிள்ளான், பிப் 4- அத்தியாவசிய உணவுப் பொருட்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தின் கீழ் கோலக் கிள்ளான் தொகுதியைச் சேர்ந்த சுமார் 6,000 பேர் கடந்தாண்டு பயனடைந்தனர்.

சமையல் பொருட்கள் குறைந்த விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்குவதால் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம்  ஜமான் ஹூரி கூறினார்.

இத்தொகுதியில் 12 வெவ்வேறு இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் 500க்கும் மேற்பட்டோர் இந்த விற்பனையில் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை நழுவ விடக்கூடாது என்பதற்காக சிலர் காலை 8.00 மணி முதல் வரிசையில் காத்திருந்தனர் என்றார் அவர்.

சந்தையை விட குறைவான விலையில் பொருட்கள் விற்கப்படும் காரணத்தால் இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை பொதுமக்கள்  பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இங்கு  பொருட்களை வாங்குவதன் மூலம் மாதாந்திர செலவினத்தில் பாதியை அவர்கள் குறைக்க இயலும் என அவர் சொன்னார்.

இந்த திட்டத்தின் கீழ் விற்கப்படும் பொருட்கள் மலிவாக இருந்தாலும் அதன் தரம் மற்ற இடங்களில் விற்கப்படும் பொருளுக்கு இணையானதாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கோழி 10.00 வெள்ளி விலையில் விற்கப்பட்டாலும் அது பெரியதாகவும் புதிதாகவும் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அரிசியும் அதேபோல் தரமிக்கதாக உள்ளது என்றார் அவர்.


Pengarang :