ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறிய இ.சி.ஆர்.எல். தரப்பினருக்கு பணி நிறுத்த உத்தரவு- மந்திரி  புசார் தகவல்

பெட்டாலிங் ஜெயா, பிப் 4– கோம்பாக் மற்றும் செரெண்டாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறல் நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்குக் கரை இரயில் தண்டவாளத் திட்டத்தின் மேம்பாட்டு ப் பணியின் ஒரு பகுதியாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கமளித்துள்ளார்.

எனினும், அந்த திட்டப் பகுதிக்குச் செல்வதற்காக சாலை அமைக்கும் பணியை சம்பந்தப்பட்டத் தரப்பினர் அனுமதியின்றி மேற்கொண்டதால் பிரச்னை எழுந்ததாக அவர் சொன்னார்.

இ.சி.ஆர்.எல். திட்டத்தின் ஒரு பகுதியாக கோம்பாக் முதல் செரண்டா வரையில் அமைக்கப்படும் சுரங்கப் பாதைக்காக அப்பகுதியில் தற்காலிகமாக பாதை போடப்பட்டுள்ளது. அப்போது இதற்கான அனுமதி பெறப்படவில்லை என்பதுதான் இதில் உள்ள பிரச்னையாகும் என அவர் கூறினார்.

இந்த அத்துமீறல் நடவடிக்கை கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிறுத்தப் பட்டதைத் தொடர்ந்து இவ்விகாரத்திற்கு தீர்வு காணப்பட்டு விட்டது. இதன் தொடர்பில் வெளியிடப்பட்ட படம் பழையதாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே அமைக்கப் பட்ட அந்த பாதையின் தோற்றத்தை சித்தரிப்பதாக இருக்கலாம்  என அவர் சொன்னார்.

கடந்தாண்டு இறுதியிலும் இவ்வாண்டு தொடக்கத்திலும் உலு கோம்பாக் மற்றும் செரெண்டா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோத வெட்டுமர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ரிம்பா டிஸ்குளோஷர் புரோஜெக்ட் எனும் அரசு சாரா அமைப்பு சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

கிளந்தான், திரங்கானு, பகாங், சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய  665 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த இ.சி.ஆர்.எல். திட்டத்தில் 59 சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. 

சிலாங்கூர் மாநிலத்தில் கோம்பாக், உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர், கிள்ளான் ஆகிய நான்கு மாவட்டங்கள் வழியாக 90.72 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த இரயில் தடம் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 32 லாட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளடங்கியுள்ளன.


Pengarang :