ECONOMY

டிக்டாக் செயலி வழி போக்குவரத்து போலீசாருக்கு எதிராக அவதூறு-  ஆடவர் கைது

கங்கார், பிப் 6- டிக்டாக் செயலி வழி போக்குரத்து போலீசாருக்கு எதிராக அவதூறு பரப்பும் காணொளியை பதிவேற்றம் செய்த ஆடவர் ஒருவரை போலீசார்  கைது செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் நாளை வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டுள்ளதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யுஷாருடின் முகமது யூசுப் கூறினார்.

அவ்வாடவருக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் 504வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233 வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த ஆடவர் கெடா, ஜித்ராவிலுள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவருக்கு முந்தைய குற்றப்பதிவுகள் இல்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

பெர்லிஸ், சிம்பாங் அம்பாட் சாலை சமிக்ஞை விளக்கு அருகே நான்கு போக்குவரத்து போலீஸ்காரர்கள் வாகனங்கள் மீது சோதனை நடவடிக்கை மேற்கொள்வதை அந்த காணொளி சித்தரிக்கிறது.

அப்போது  லோரி ஒன்றைச் சோதனையிட்ட அந்த போலீஸ்காரர்கள் பல்வேறு குற்றங்களுக்காக நான்கு குற்றப்பதிவுகளை அந்த லோரிக்கு வழங்கினர். போலீஸ்காரர்களின் அந்த நடவடிக்கையில் அதிருப்தி கொண்ட அந்நபர் இக்காணொளியை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது என யாஷாருடின் சொன்னார்.

இந்த காணொளி சினமூட்டும் மற்றும் அவதூறு பரப்பும் வகையிலும் காவல் துறையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் இருந்தன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :