ACTIVITIES AND ADS

சொந்தமாகப் பைகளைக் கொண்டு வருவீர்- மலிவு விற்பனையில் பங்கேற்போருக்கு  பி.கே.பி.எஸ். அறிவுறுத்து

ஷா ஆலம் 6- பிளாஸ்டிக் பை இல்லா இயக்கத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஏதுவாக மாநில அரசின் மலிவு விற்பனையில் பொருள் வாங்க வருவோர் பைகளை உடன் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாநில அரசின் இந்த இயக்கத்தை வெற்றியடையச் செய்யும் நோக்கிலான இந்த நடைமுறை இம்மாதம் 7ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) கூறியது.

பிளாஸ்டிப் பை இல்லா இயக்கத்திற்கு நாம் ஆதரவளிப்போம். பைகளை உடன் கொண்டு வருவதன் மூலம் மாற்றத்திற்கு வழி வகுப்போம் என்று அக்கழகம் தனது பேஸ்புக் பதிவில்  குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் 2.0 இயக்கம் கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் வரை 1,200 இடங்களில் நடத்தப்படுகிறது.

இந்த விற்பனையில் கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேடு முட்டை 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இவை தவிர ஐந்து கிலோ அரிசி 10.00 வெள்ளி விலையிலும் ஐந்து கிலோ சமையல் எண்ணெய் 25,00 வெள்ளி விலையிலும் இங்கு கிடைக்கும். 

சிலாங்கூர் மாநில அரசு ஒவ்வொரு சனிக்கிழமையும் பிளாஸ்டிக் பை இல்லா இயக்கத்தை கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கியது. கடந்த 2017ஆம் ஆண்டில் இந்த இயக்கம் வாரம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது.


Pengarang :