NATIONAL

திரங்கானுவில் மீண்டும் வெள்ளம்- இரு துயர் துடைப்பு மையங்கள் திறப்பு

கோலாலம்பூர், பிப் 7- திரங்கானு மாநிலத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கெமாமான் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 28 பேர் இரு துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் லெம்பா ஜாபோர் தேசியப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள வேளையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கம்போங் ஆயர் பூத்தே சமூக மண்டபத்தில் அடைக்கலம் புகுந்துள்ளதாக மாநில வெள்ள மேலாண்மை செயல்குழு கூறியது.

கெமாமானில் உள்ள தெபாக் ஆற்றில் நீர் மட்டும் எச்சரிக்கை அளவைத் தாண்டி 18.79 மீட்டராக உயர்ந்துள்ளதாக மாநில அரசின் வெள்ளத் தகவல் அகப்பக்கம் தெரிவித்தது.

பகாங் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்வு கண்டு 1,240 குடும்பங்களைச் சேர்ந்த 4,230 பேராகப் பதிவாகியுள்ளது. நேற்றிரவு 353 குடும்பங்களைச் சேர்ந்த 1,360 பேர் மட்டுமே துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் 21 துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

கெடா மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கம்போங் பாடாங் லீமாவைச் சேர்ந்த  26 பேர் கூலிம், ஜங்காங் சமய இடைநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகச் கூலிம் மாவட்டப் பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்தது.

நேற்று இரண்டு மணி நேரத்திற்குப் பெய்த அடை மழை காரணமாகச் சுங்கை கோப் ஆற்றின் தடுப்பு உடைந்து நீர் வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் துயர் துடைப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாகப் பேரிடர் மேலாண்மை செயலகத்தின் பேச்சாளரான அமிருள் அலிப் அகமது தெரிவித்தார்.


Pengarang :