NATIONAL

பத்துமலைத் திருத்தலத்தில் டன் கணக்கில் தவறவிட்ட காலணிகள்- துப்புரவுப் பணியாளர்களுக்குப் புதியப் பிரச்சனை

கோலாலம்பூர், பிப் 7- இவ்வாண்டு தைப்பூசத்தின் போது பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் பக்தர்கள் தவற விட்ட ஆயிரக்கணக்கான காலணிகள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலய வளாகத்தில் சுமார் 3,000 முதல் 5,000 கிலோ வரையிலான காலணிகளைப் பக்தர்கள் தவற விட்டுள்ளதாக ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் கௌரவச் செயலாளர் சி. சேதுபதியை மேற்கோள் காட்டி தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

கைவிடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான காலணிகள், தேவஸ்தானம் எதிர்நோக்கும் வழக்கத்திற்கு மாறான புதியப் பிரச்சனையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான காலணிகள் ஆலயத்தின் வாயிலில் காணப்பட்டன. காணிகளைக் கண்டு பிடிக்க இயலாத காரணத்தால் பக்தர்களும் வருகையாளர்களும் அதனை கைவிட்டுச் சென்றிருக்க க்கூடும் என அவர் சொன்னார்.

ஆயிரக்கணக்கான காலணிகளைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்புறப்படுத்தினோம். இதர குப்பைகளோடு காலணிகளையும் தொடர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார் அவர்.

இதனிடையே, தைப்பூசத்திற்கு ப்பிறகு நேற்று காலை ஸ்டார்மெட்ரோ ஆலய வளாகத்தில் மேற்கொண்ட ஆய்வில் அப்பகுதி சுத்தமாகக் காணப்பட்டதோடு குப்பைகளை அகற்றும் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதைக் காண முடிந்தது.

எனினும், ஆலயத்திற்கு வெளியே பிரதான சாலையில் பிளாஸ்டிக் போத்தல்கள், போலிஸ்ட்ரின் உணவுக் கலங்கள் உள்ளிட்ட குப்பைகள் குவிந்து காணப்பட்டன.

முந்தைய ஆண்டுகளை விட இவ்வாண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தக் காரணத்தால் குப்பைகளின் அளவும் அதிகரிப்பைக் கண்டதாகச் சேதுபதி தெரிவித்தார்.

பிரதான ஆலய வளாகத்தில் நாங்கள் அதிகமான குப்பைத் தொட்டிகளை வைத்திருந்தோம். குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் வீசும்படி பக்தர்களுக்கு அறிவுறுத்திய போதிலும் இந்த குப்பைப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றார் அவர்.


Pengarang :