NATIONAL

உக்ரைன் நாட்டிற்கு வெ.227,984 மதிப்புள்ள மருந்துகளை மலேசியா வழங்கியது

புத்ராஜெயா, பிப் 7- உக்ரைன் நாட்டிற்கு 227,984 வெள்ளி மதிப்பிலான மருந்துகளைச் சுகாதார அமைச்சு இன்று வழங்கியது. பல்வேறு மருந்துகள் அடங்கிய இந்த மருத்துவப் பொருள்களைச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா மலேசியாவுக்கான உக்ரைன் தூதரக அலுவலகப் பொறுப்பதிகாரி டெனிஸ் மைகாய்லிக்கிடம்
ஒப்படைத்தார்.

எளிமையான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஜலிஹா, மனிதக் குலத்தின் சிறந்த உலகலாவிய மற்றும் பொதுவான இலக்கை வெளிப்படுத்தும் விவேக கூட்டணிக்கான சிறந்து எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைகிறது என்றார்.

லட்சக்கணக்கான உக்ரேனியர்கள் ஏற்கனவே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். பலர் அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்த அவசரச் சூழலில் ஏற்பட்டுள்ள தேவைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் தங்கு தடையின்றி கிடைப்பதை
உறுதி செய்ய அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் உக்ரைன் நாட்டு அரசாங்கத்துடன் குறிப்பாகச் சுகாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க தாங்கள் தயாராக இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :