SELANGOR

சுங்கை காண்டீஸ் தொகுதியில் மூத்தக் குடிமக்கள் உதவித் திட்டத்திற்குத் தினசரி 100 விண்ணப்பங்கள்

ஷா ஆலம், பிப் 7- மூத்தக் குடிமக்கள் நட்புறவுத் திட்டத்திற்கு (எஸ்.எம்.யு.இ.)  சுங்கை காண்டீஸ் தொகுதி சேவை மையம் தினசரி ஏறக்குறைய 100 விண்ணப்பங்களைப் பெற்று வருகிறது.

இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல் இதற்கு பொதுமக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதாகச் சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி முகமது ஷாபிக் முகமது சுபியான் கூறினார்.

இந்த திட்டத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் அதிகமானோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வர் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளைக் கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கி வருகிறோம். தகுதி உள்ளவர்களுக்கு நேரடியாக இந்த உதவியை வழங்குகிறோம் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக அவர், இங்குள்ள புக்கிட் நாகா பள்ளிவாசலில் நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனைத் திட்டத்தைச் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி சார்பில் பார்வையிட்டார்.

ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெறுவதற்கான வருமான வரம்பு இவ்வாண்டு முதல் 2,000 வெள்ளியிலிருந்து 3,000 வெள்ளியாக உயர்த்தப்படுவதாக மாநில அரசு அறிவித்திருந்தது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டப் பற்றுச் சீட்டுகளின் மதிப்பு 100 வெள்ளியிலிருந்து 150 வெள்ளியாக உயர்த்தப்பட்டதோடு மரணச் சகாய நிதியாக 500 வெள்ளியும் வழங்கப்படுகிறது.


Pengarang :