NATIONAL

மூன்று தனியார் உயர்கல்வி கூட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்

கோலாலம்பூர், பிப். 7: கடந்த சனிக்கிழமை பண்டார் சன்வே, சுபாங் ஜெயா வில் உள்ள தனியார் உயர் கல்வி கூடத்தில் மூன்று மாணவர்களைக் கைது செய்தக் காவல்துறையினர், சோதனை நடவடிக்கையின் போது கிட்டத்தட்ட ஒரு கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினர்.

சுபாங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமத் கூறுகையில், நள்ளிரவு 12.15 மணியளவில் தனியார் உயர்கல்வி கூடத்தில் உள்ள ஆண் விடுதியில் நடந்த முதல் சோதனையில், இரண்டு மாணவர்களைக் கைது செய்து, 34.3 கிராம் எடையுள்ள கஞ்சா எனச் சந்தேகிக்கப்படும் உலர்ந்த இலைகளின் சுருக்கப்பட்ட துண்டுகள் அடங்கிய பிளாஸ்டிக் பாக்கெட்டைப் பறிமுதல் செய்தனர்.

15 நிமிடங்களுக்குப் பிறகு விடுதியில் உள்ள மற்றொரு பிரிவில் இரண்டாவது சோதனையை நடத்தினர். அச்சமயம் மற்றொரு மாணவரைக் கைது செய்தனர் மற்றும் 868.7 கிராம் எடையுள்ள கஞ்சா எனச் சந்தேகிக்கப்படும் மூன்று சுருக்கப்பட்ட உலர்ந்த இலைகளின் துண்டுகளைக் கைப்பற்றினர்.

“அம்மூன்று மாணவர்களும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் டெட்ராஹைட்ரோகன்னாபினால் (THC) எனும் போதைப்பொருளை உட்கொண்டு இருப்பது கண்டறியப்பட்டது.

வான் அஸ்லானின் கூற்றுப்படி, ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39A(1) மற்றும் பிரிவு 39B இன் கீழ் அம்மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

– பெர்னாமா


Pengarang :