HEALTHSELANGOR

மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனையில் 22,513 பேர் பங்கேற்பு- பாதி பேருக்குத் தொடர் சிகிச்சை

ஷா ஆலம், மார்ச் 1- நோய்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் மாநில அரசினால் கடந்தாண்டு நடத்தப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனையில் 22,513 பங்கேற்றனர்.

அந்த சிலாங்கூர் சாரிங் பரிசோதனையில் பங்கு பெற்றவர்களில் 49 விழுக்காட்டினருக்குத் தடுப்பு சிகிச்சை தேவைப்படுவது கண்டறியப்பட்டது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த எண்ணிக்கை பரிசோதனையில் பங்கு கொண்டவர்களில் ஏறக்குறைய பாதி பேராகும். தடுப்பு நடவடிக்கை அவர்களுக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாகும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

பரிவுமிக்க சிலாங்கூர் எனும் இலக்குக்கு ஏற்ப ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை மாநில அரசு நடத்தியதாக அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று சமூகப், பொருளாதார மற்றும் சுகாதார ரீதியில் மக்களுக்கு விளைவுகளை ஏற்படுத்தியதைக் கருத்தில் கொண்டு அவர்கள் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

கடந்தாண்டு மே முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்ட இந்த சிலாங்கூர் சாரிங் திட்டத்திற்காக மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்திருந்தது. நோய்ப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உடல் பருமனானவர்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்காதவர்களை இலக்காக கொண்டு இந்த சிலாங்கூர் சாரிங் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :