ACTIVITIES AND ADSECONOMY

நோன்புப் பெருநாளின் போது மலிவு விற்பனையில் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஷா ஆலம், மார்ச் 17- நோன்புப் பெருநாள் காலத்தில் ஜெலாஜா ஏசான் ராக்யாட் விற்பனையில் கோழி மற்றும் முட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு வைக்கப்படும்.

பொது மக்களிடமிருந்து குறிப்பாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

ரமலான் மாதத்தின் போது இந்த மலிவு  விற்பனை வழக்கம் போல் நடைபெறும். குறிப்பாக நோன்பு பெருநாள் சமயத்தில் விற்பனைக்கு வைக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும் இந்த விற்பனையும் பெரிய மற்றும் விரிவான அளவில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

பெருநாளின் போது பொது மக்களின் தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு அதனைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என மாநில சட்டமன்றத்தில் அவர் சொன்னார்.

நோன்புப் பெருநாளின் போது மலிவு விற்பனையின் அமலாக்கம் குறித்து மேரு உறுப்பினர் பாக்ருள்ராஸி முகமது மொக்தார் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனை கடந்த ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மலிவு விற்பனை வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாநிலத்தின் ஒன்பது தொகுதிகளில் நடத்தப்படுகிறது.


Pengarang :