HEALTHNATIONAL

செம்பனைத் தோட்டத்திலுள்ள சட்டவிரோத கிராமத்தில் குடிநுழைவுத் துறை சோதனை- 61 அந்நிய நாட்டினர் கைது

கிள்ளான், மார்ச் 18- இங்குள்ள ஆயர் ஹீத்தாம் தொழில்பேட்டைப் பகுதியிலுள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கிராமம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொண்ட குடிநுழைவுத் துறையினர் 61 அந்நிய நாட்டினரைக் கைது செய்தனர்.

நேற்றிரவு 11.30 மணியளவில் தொடங்கப்பட்ட இந்நடவடிக்கையில் 18 சிறார்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 32 ஆண்கள் மற்றும் 29 பெண்கள் கைது செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ட்ஸைமி டாவுட் கூறினார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த கிராமத்தில் மின் விநியோகம், குடிநீர் வசதிகளோடு 30 முதல் 40 வீடுகள் வரை இருப்பது தாங்கள் மேற்கொண்ட  சோதனையில் தெரியவந்ததாக அவர் சொன்னார்.

மின்சார மற்றும் நீர் விநியோகத்தை அவர்கள் சட்டவிரோதமாகப் பெற்றுள்ளனர். மேலும் அங்கு அமைக்கப்பட்ட கழிவறைகளின் கழிவு நீர்க் குழாய்களும் அருகிலுள்ள ஆற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருந்தன. வசதிப்பதற்கு அறவே தகுதி இல்லாத நிலையில் இந்த குடியிருப்பு மிகவும் அசுத்தமாகக் காணப்பட்டது. சுகாதாரப் பாதிப்பு ஏற்பட இத்தகையச் சூழல் வழிவகுக்கும் என அஞ்சுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

அவர்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்த போது வருமானத்திற்காக மிளகாய், கிழக்கு, வாழை போன்ற பயிர்களை நடவு செய்துள்ளதோடு கோழிகளையும் வளர்த்து வருவது தெரிய வந்தது. மேலும் சிலர் சுற்று வட்டாரங்களில் துப்புரவு பணியை மேற்கொண்டு வந்துள்ளனர் என்றர் அவர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது மேலும் 30 அந்நிய நாட்டினர் அருகிலுள்ள ஆற்றோரம் வழியாக தப்பியோடி விட்டதாக இந்த சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இந்த சட்டவிரோத கிராமம் சூராவ், மளிகைக் கடை, பூப்பந்து மைதானம் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.


Pengarang :