NATIONAL

அரசு தொடர்ந்து கடன் வாங்குவதை அனுமதிக்கவில்லை – பொருளாதார அமைச்சர்

ஷா ஆலம், மார்ச் 22: மந்தமாக உள்ள நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு கடன் வாங்குவதை அனுமதிக்க முடியாது. வளர்ச்சி நோக்கங்களுக்காக அரசு தொடர்ந்து கடன் வாங்குவது நல்ல பொருளாதார யுக்தியல்ல என்று பொருளாதார அமைச்சர் கூறினார்.

தற்போது உலகின் நிதி வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதாகவும், கடன் வாங்குவதால்,  தேசியக் கடன் சுமை அதிகரிக்கும், அவை  மக்கள் மீதும்,  எதிர்கால சந்ததியினருக்கும் மாற்றி விடுவதாகும் என்றும் ரஃபிஸி ரம்லி கூறினார்.

ஒரு பொருளாதார முடக்க நிலையிலிருந்து மீண்டு, கடனைப் பெறாமல் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஊக்கமளித்து  (PMKS) மீட்டெடுக்கும்  வழிகளை தேட வேண்டும்  என்று அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதார மீட்சியை விரைவு படுத்த உதவும் அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கைகளை அறிய விரும்பும் டான்ஸ்ரீ மொகிடின் யாசினின் கூடுதல் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

கணிப்புகள் மற்றும் நிலையான பொருளாதார செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆண்டு பொருளாதாரக் கொந்தளிப்பை நாடு எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கவில்லை என்று ரஃபிஸி மேலும் கூறினார்.

உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தரவுகள் கடந்த ஆண்டு முதல் விவசாயத் துறையைத் தவிர அனைத்து துறைகளிலும் மீட்சி பெற்று வருவதை காட்டுகிறது என்று பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கினார்.

“பொருளாதார மீட்சியை விரைவு படுத்துவதற்காக, நிதியாண்டை வலுப்படுத்துதல், தேசிய வருமானத்தை அதிகரித்தல் மற்றும் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :