NATIONAL

அடையாளக் கார்டை பிறருக்கு இரவலாகக் கொடுத்த மூவருக்குச் சிறை, அபராதம்

தாவாவ், மார்ச் 29- மைகார்ட் எனப்படும் அடையாள அட்டை எவ்வளவு
முக்கியமான ஆவணம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அடையாளக் கார்டை பிறருக்கு இரவல் கொடுத்ததால் மூவருக்கு விபரீத
விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அடையாளக் கார்டை பிறருக்கு இரவல் கொடுத்தது மற்றும்
அதிகாரிகளிடம் அந்த முக்கிய ஆவணத்தைக் காட்டத் தவறியது ஆகிய
குற்றங்களுக்காக அந்த மூவருக்கும் இங்குள்ள மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

அப்துல் ஹபில் மோபின் (வயது 50) மற்றும் பாத்திமா ஹசான் (வயது 50)
ஆகிய இருவரும் தங்களுக்கு எதிராக தனித்தனியாக வாசிக்கப்பட்ட
குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் லியோனா
டோமினிக் மோஜிலியு அவர்களுக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனையும்
2,500 வெள்ளி அபராதமும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும்
இரண்டு மாதச் சிறைத்தண்டனையும் விதித்தார்.

மாஜிஸ்திரேட் ஸூல் எல்மி முகமது யூனுஸ் முன்னிலையில் இதே
குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட மற்றொரு நபரான டுரியானி சுயாயிப்
(வயது 36) என்பவருக்கு 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 24ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தாவாவ் யு,டி.சி. தேசிய
பதிவுத் துறை அலுவலகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அம்மூவர் மீதும்
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

ஓப்ஸ் லஞ்சார் நடவடிக்கையின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.00
மணி முதல் 10.30 வரை செம்புர்ணா, கம்போங் ஆயரில் சோதனை
மேற்கொண்ட தேசிய பதிவுத் துறை அதிகாரிகள் அம்மூவரையும் கைது
செய்தனர்.

இச்சோதனையின் போது தங்களின் அடையாளக் கார்டை அதிகாரிகளிடம்
காட்டத் தவறிய அவர்கள், அவற்றை மற்றவர்களுக்கு இரவல்
கொடுத்ததையும் ஒப்புக் கொண்டனர்.


Pengarang :