HEALTHMEDIA STATEMENT

கிளந்தானில் வெப்ப பக்கவாதம் காரணமாக ஒருவர் மட்டுமே மரணம்- சுகாதார அமைச்சு விளக்கம்

கோலாலம்பூர், ஏப் 29- கிளந்தான் மாநிலத்தில் வெப்ப பக்கவாதம் காரணமாக 11வயதுச் சிறுவன் மட்டுமே உயிரிழந்த தாக சுகாதார அமைச்சு கூறியது. 

ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைப் போல் 19 மாதம் நிரம்பிய குழந்தை வெப்ப பக்கவாதத்தால் உயிரிழக்கவில்லை என்று அது தெளிவுபடுத்தியது.

கடுமையான நீர்ச்சத்து குறைவு காரணமாக ஏற்பட்ட வெப்ப பக்கவாதத்தால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்தது கிளந்தான் மாநில சுகாதாரத் துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான் கூறினார்.

எனினும், 19 மாதக் குழந்தைக்கு நேர்ந்த மரணத்திற்கு வெப்ப பக்கவாதம் காரணமல்ல எனக் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதுவரை வெப்பத் தாக்கம் சம்பந்தப்பட்ட நோய் தொடர்பில் ஐந்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறிய அவர், அவற்றில் மூன்று சரவா மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டன என்றார்.

வெப்பம் நிறைந்த சூழலில் அதிக நேரம் இருப்பது மற்றும் குறைவாக நீர் அருந்துவது போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சிறார்கள் மற்றும் கடுமையான நோய்களால் பீடிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் சொன்னார்.

அதிகப்படியான வெப்பம் காரணமாக ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டினால் தலைவலி, உடல் சோர்வு, கவனச் சிதறல், தலைச்சுற்றல், மூட்டு பலவீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :