ECONOMYPBTSELANGOR

ஐரோப்பாவிலிருந்து கொண்டு வரப்பட்ட வெ.7.8 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்

பட்டர்வெர்த், மே 13- அரச மலேசிய சுங்கத் துறையினர் 1,063.206 கிலோ எடையுள்ள எக்ஸ்டசி போதை மாத்திரைகள் அடங்கிய கொள்கலன் ஒன்றைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்கலன் ஐரோப்பாவிலிருந்து பட்டர்வெர்த் வட துறைமுகத்திற்கு கடந்த 6ஆம் தேதி கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

உளவுத் தகவல்களின் அடிப்படையில் இம்மாதம் 9ஆம் தேதி அந்த துறைமுகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட சுங்கத் துறையினர் அந்த கொள்கலனைக் கைப்பற்றியதோடு இதன் தொடர்பில் கப்பல் நிறுவன முகவர் ஒருவரையும் கைது செய்ததாக சுங்கத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜாசுலி ஜோஹான் கூறினார்.

அந்த கொள்கலனை அதிகாரிகள் சோதனையிட்ட போது அதில் 20 சைலண்ட் கொம்ப்ரெசர் காற்று அழுத்தச் சாதனங்கள் இருப்பதைக் கண்டனர். அந்த சாதனங்களை பரிசோதித்ததில் அவை மாற்றியமைக்கப்பட்டு எக்ஸ்டசி போதை மாத்திரைகள் அடங்கிய பொட்டலங்கள் அதனுள் பதுக்கி வைக்கப்படுள்ளது கண்டு பிடிக்கப்பட்ட என்று அவர் சொன்னார்.

கைப்பற்றப்பட்ட அந்த  போதை மாத்திரைகளின் மதிப்பு 7 கோடியே 80 லட்சம் வெள்ளியாகும் எனக் கூறிய அவர், இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப் பொருள் பறிமுதல் நடவடிக்கை இதுவாகும் என வர்ணித்தார்.

பெரிய அளவில் நாட்டிற்குள் போதைப் பொருளை கடத்தி வரும் கும்பல்களை அடையாளம் காண்பதற்காக இதன் தொடர்பில் தாங்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கைதான ஆடவர் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக ஒரு வாரம் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.


Pengarang :