ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

மாநிலத்திலுள்ள கிராமச் சாலைகளை மேம்படுத்த வெ.20 லட்சம் கூடுதல் நிதி- மத்திய அரசு வழங்கியது

சபாக் பெர்ணம், மே 13- மாநிலம் முழுவதும் கிராமப்புறச் சாலைகளை
தரம் உயர்த்துவதற்கு கூடுதலாக 20 லட்சம் வெள்ளி நிதியை மாநில அரசு
பெற்றுள்ளது.
இந்த நிதியின் கீழ் சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு
அடையாளம் காணப்பட்ட சாலைகளில் பெரும்பாலானவை சபாக் பெர்ணம்
மாவட்டத்தில் உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவலை தாம்
அண்மையில்தான் கிராம மற்றும் வட்டார மேம்பாட்டுத் துறை
அமைச்சிடமிருந்து பெற்றதாக அவர் தெரிவித்தார்.
தோட்டங்கள் மற்றும் வேளாண் நிலங்களை உட்படுத்திய பகுதிகளில் இந்த
கிராமச் சாலை சீரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அவர்
குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற சபாக் பெர்ணம் மாவட்ட நிலையிலான
நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய
போது அவர் இவ்வாறு கூறினார்.
மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளை சீரமைக்கும் மற்றும்
விரிவுபடுத்தும் பணியை மாநில அரசு பெரிய அளவில்
மேற்கொள்ளவிருக்கிறது. ஐந்து கோடி வெள்ளி செலவிலான இந்த திட்டம்
விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இது தவிர, மாநில அரசின் சாலை பராமரிப்பு நிறுவனமான இன்ப்ராசெல்
மூலம் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இதுவரை 39,000 இடங்களில்
பழுதடைந்த சாலைகளை செப்பனிடப்பட்டுள்ளன.

Pengarang :