ECONOMYPBT

காப்பாரிலுள்ள சட்டவிரோத குப்பைக் கொட்டும் மையத்தில் துப்புரவுப் பணி 70 விழுக்காடு பூர்த்தி

 ஆலம், மே 27- காப்பார் 14வது மைலில் உள்ள சட்டவிரோத குப்பைக் கொட்டும் மையத்தை துப்புரவு செய்யும் பணிகள் 70 விழுக்காட்டுக்கும் மேல் பூர்த்தியடைந்துள்ளதாக கிள்ளான் நகராண்மைக் கழகம் கூறியது.

மொத்தம் 11 உரிமையாளர்களுக்கு சொந்தமான அந்த சட்டவிரோத குப்பைக் கொட்டும் மையம் கோல சிலாங்கூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதாக நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.

அந்த மறுசுழற்சி நெகிழிப்பை குவியலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு பொதுமக்கள் கோல சிலாங்கூர் தீயணைப்பு நிலையத்தின் உதவியைத் நாடியதைத் தொடர்ந்து அந்த சட்டவிரோத மையத்திற்கு எதிரான நடவடிக்கையை தாங்கள் கடந்த 18ஆம் தேதி எடுத்ததாக  அந்த ஊராட்சி மன்றம் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

அந்த குப்பைகளை அகற்றுவது, கால்வாய்களைத் தோண்டுவது, அப்பகுதிக்குச் செல்லும் வழியை காங்கீரிட் தடுப்புகளைக் கொண்டு மறைப்பது மற்றும் 1974ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தர சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் மாநில சுற்றுச்சூழல் துறையுடன் ஒத்துழைப்பது ஆகிய நடவடிக்கைகளை நகராண்மைக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

இது தவிர தெனாகா நேஷனல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது மற்றும் ட்ரோன் சாதனம் மூலம் அப்பகுதியை குறிப்பாக ஒலியீர்ப்பு கோபுர வளாகத்தில் கண்காணிப்பை மேற்கொள்வது ஆகிய திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


Pengarang :