ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாணவர் தங்கும் விடுதிக்கு  ரி.ம. மூன்று லட்சம் தேவை.  மிட்லெண்ட்ஸ்  தோட்டத் தமிழ்ப்பள்ளி  வாரியத் தலைவர் உதயசூரியன் வேண்டுகோள்

கிள்ளான். மே.25-  சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியச் சமுதாயத்தில் பரவலாகப் பேசப்படும் பள்ளியாக  மிட்லெண்ட்ஸ்  தோட்டத் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வசதி குறைந்த ( B 40 ) மாணவர்கள் தங்கிக்கல்வி கற்கச் சிலாங்கூர் மாநில அரசு ஆதரவுடன் மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதி சிறப்பாகச் செயல்பட முதல் கட்டமாக ரி.ம. 300,000.00 தேவைப்படுகிறது.

இத்தொகையை கொடுப்பதாக மாநில அரசு வாக்குறுதி  வழங்கியுள்ளது என்று அப்பள்ளியின் வாரியத் தலைவர் உதயசூரியன் தெரிவித்தார்.

நேற்று எம்.ஆர்.சி.பி.யின் அறவாரியம் வழங்கிய ஒரு லட்சம் ரிங்கிட் மலேசியா உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றுகையில் அதை அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கின.  மிட்லெண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியும் அதில் சிக்கித் தவித்தது.  இரண்டு தொடர் வீடுகள் ( ரூமா பஞ்சாங் ) போல் இருந்த அன்றைய பள்ளி கட்டிடம்,  சிலாங்கூரில் அரசியல் மாற்றத்திற்கு பிறகு பல்வேறு வசதிகள் கொண்ட பள்ளியாக உருமாறியுள்ளது. இதற்கு மாநில அரசுக்கு நன்றி.

 

 இருப்பினும் நாட்டில் நிலவிய மத்திய மாநில அரசு வேற்றுமையால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க நேரிட்டது. தற்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதால் பள்ளிக்கு நிலவி வந்த இன்னல் நீங்கியுள்ளது. இதனை நாம் தொடர்ந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

200 வசதி குறைந்த இந்திய மாணவர் தங்கி படிக்க கூடிய மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் முதல் கட்டமாக தங்கி படிக்க நிர்வாக செலவுக்கு ரி.ம. 300,000.00 தேவைப்படுகிறது. இந்த உதவித்தொகையை கொடுப்பதாக சிலாங்கூர் மாநில அரசு வாக்குறுதி அளித்துள்ளது.

ஆரம்பத்தில் 25 மாணவர்களுடன் தொடங்கும் இவ்விடுதி இவ்வாண்டு இறுதிக்குள் கட்டம் கட்டமாக மாணவர்களை அதிகரிப்பதும் 100 மாணவர்கள் வரை இவ்விடுதியில் தங்கவைப்பது இலக்காகும்.

நமது மாணவர்களுக்கு முறையான கற்றல் கற்பித்தலை கொடுத்தால் இந்தியச் சமுதாயம் எதிர்நோக்கியுள்ள குண்டர் கும்பல் பிரச்சனைகளை எதிர் காலத்தில் நாம் கலைய முடியும்.

இதே போன்று தான் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சீ விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற நிலையும். நாட்டில் உள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்தால் மகத்தான சாதனை படைக்கக் கூடிய ஆற்றலை நம் நாட்டு மாணவர்கள் பெறுவர் என்றார்  அவர்.

இந்த உதவி நிதி தொகை வழங்கும் நிகழ்வு  மிட்லெண்ட்ஸ்  தோட்டத் தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கோத்தா அங்கிரிக் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துவான் நஜ்வான் ஹலிமி   எம்.ஆர்.சி.பி.யின் நடவடிக்கை உயர் அதிகாரி துவான் பரமசிவம் அருணாசலம், பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி.தேவமணி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இளங்கோவன் முனியாண்டி, புகழ் பெற்ற  மிட்லெண்ட்ஸ்  தோட்ட ஆலயத் தலைவர் மோகன்ராஜ், அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.


Pengarang :