SELANGOR

பறவைகளைப் பொறி வைத்து பிடிக்கையில் நேர்ந்த துயரம்- மின்னல் தாக்கி ஆடவர் மரணம், இருவர் காயம்

கோல திரங்கானு, ஜூன் 2- மாராங், கம்போங் பாடாங் தஞ்சோங்கில்
உள்ள காலி நிலத்தில் பறவைகளை பொறி வைத்து பிடித்துக்
கொண்டிருந்தவர்களை மின்னல் தாக்கியதில் ஒருவர் சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் லேசான
காயங்களுக்குள்ளாயினர்.

நேற்று மாலை நிகழ்ந்த இச்சம்பவத்தில் முகமது ஹசான் முகமது ரானி
(வயது 38) என்பவர் உயிரிழந்த வேளையில் அவரின் சகாக்களான முகமது
ஃபாடிலா ஜூசோ (வயது 37) மற்றும் அப்துல் ஹிஷ்யாம் முகமது ஆகிய
இருவரும் சொற்ப காயங்களுக்குள்ளாயினர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 7.00 மணியளவில் தாங்கள் அவசர
அழைப்பைப் பெற்றதாக மாராங் மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி.
முகமது ஜைன் மாட் கூறினார்.

இந்த சம்பவம் அந்த கிராமத்திலுள்ள காலி நிலம் ஒன்றில் மாலை 6.00
மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மின்னல் தாக்கிய போது
அம்மூவரும் பறவைகளைப் பொறி வைத்து பிடித்துக் கொண்டிருந்தனர்
என்று அவர் சொன்னார்.

பறவைகளைப் பிடித்துக் கொண்டிருந்த போது மழை கடுமையாகப்
பெய்யத் தொடங்கியுள்ளது. அம்மூவரும் உடனடியாக அருகிலுள்ள
மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது
என்றார் அவர்.

முகமது ஹசானை மின்னல் நேரடியாகத் தாக்கிய வேளையில் அவரின்
அருகில் நின்றிருந்த இருவரும் மின்னல் சிதறல்களின்
தாக்கத்திற்குள்ளாகினர் என அவர் மேலும் சொன்னார்.

மரணமடைந்த ஆடவரின் சடலம் பரிசோதனைக்காகக் கோல திரங்கானு,
சுல்தானா நுர் ஷஹிரா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் காயமடைந்த இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


Pengarang :