SELANGOR

அனைத்து இனங்களுக்கும் பயன் தரும் மலிவு விற்பனை- மாநில அரசின் முயற்சிக்குச் பொதுமக்கள் வரவேற்பு

கோம்பாக், ஜூன் 2- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஜெலாஜா ஏசான் ராக்யாட்
மலிவு விற்பனை அனைத்து இன மக்களுக்கும் பயன் தருவது
நிரூபணமாகியுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் மலிவான விலையில்
அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை
ஏற்படுத்தும் மாநில அரசின் இந்த திட்டத்தை தாம் பெரிதும் வரவேற்பதாக
குடும்ப மாதான ஆர். ரஞ்சனி (வயது 35) கூறினார்.

இந்த மலிவு விற்பனையில் பல்லின மக்களும் கலந்து கொள்வதைக்
காண முடிகிறது. உதவி தேவைப்படும் மக்களுக்கு இந்த திட்டம் பெரிதும்
துணை புரிகிறது. இன வேறுபாடின்றி அனைத்து மக்களும் நிதி
நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் பணத்தை
மிச்சப்படுத்துவதற்கு இத்தகைய மலிவு விற்பனைத் திட்டங்கள் பெரிதும்
உதவியாக உள்ளன என்றார் அவர்.

கோழி, முட்டை போன்ற அத்தியாவசியப் பொருள்களை மலிவான
விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இத்திட்டம் குறித்து
தாம் பெரிதும் மனநிறைவு கொள்வதாக ரஞ்சனி தெரிவித்தார்.

இங்குள்ள பத்து கேவ்ஸ் டேவான் ராக்யாட்டில் நேற்று நடைபெற்ற
சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின்
போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, பொது மக்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த மலிவு
விற்பனையை தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக ஆங்காங்கே கடைகள்
நிறுவப்பட வேண்டும் என துப்புரவுப் பணியாளரான உமி ஃபாத்திமா
முகமது (வயது 60) ஆலோசனை கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரில் பெரும்பாலோர் ஷிப்ட்
முறையிலும் வார இறுதி நாட்களிலும் வேலை செய்ய வேண்டிய
கட்டாயத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஏற்ற வகையில் விற்பனை
நேரத்தை இலகுவாக்கினால் மேலும் அதிகமானோர் பயன்பெறுவதற்குரிய
வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.


Pengarang :