ECONOMYMEDIA STATEMENT

மோட்டார் சைக்கிள் திருடும் குழுக்களைப் போலீசார் கைது செய்தனர் 

ஷா ஆலம், ஜூன் 2: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் திருடுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இரு குழுக்களை சிலாங்கூரில் நடத்தப்பட்ட தொடர் சோதனையின் வழி போலீசார், வெற்றிகரமாக முறியடித்தனர், அதில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்..

கைது செய்யப்பட்ட அனைவருக்கும் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும்  போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு கடந்தகாலக் குற்றப் பதிவுகள் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் சிலர் சிறை தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்டவர்கள் என ஷா ஆலம் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

“கடந்த மாதத் தொடக்கத்தில் நாங்கள் ஆறு சோதனைகளை நடத்தினோம். மேலும் 24 முதல் 33 வயதுடைய ஒன்பது சந்தேக நபர்களை கிள்ளான், ஷா ஆலம் மற்றும் பந்திங் ஆகிய இடங்களில் கைது செய்ய முடிந்தது,” என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இரு கும்பல்கள் பொதுவாக பொது வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாத பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிளாட்களில் திருட எளிதான அதாவது பாதுகாப்பு பூட்டுகள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடியுள்ளனர், என்றார் முகமட் இக்பால்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் முதலில் விற்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் சந்தேகத்திற்குரிய அனைத்து நபர்களும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது சிறுநீர் பரிசோதனையில் தெரிய வந்தது.

“சந்தேக நபர்களை கைது செய்ததைத் தொடர்ந்து, யமஹா 135 எல் சி, ஒய் 15 இசட்ஆர் மற்றும் ஹோண்டா எக்ஸ்5 போன்ற 13 மோட்டார் சைக்கிள்களையும் கூடுதலாக மூன்று மோட்டார் சைக்கிள் பிரேம்கள் மற்றும் தலா இரண்டு என்ஜின் பிளாக்குகள் மற்றும் இன்ஜின் ஸ்கின் களைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரிங்கிட் 20,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் மற்றும் கிள்ளான் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பான 20 வழக்குகளை தனது தரப்பு வெற்றிகரமாகத் தீர்த்து வைத்துள்ளது என்றார்.

– பெர்னாமா


Pengarang :